History

Read in English

வடச்சென்னை பகுதியில் வாழ்ந்த, ஏழ்மையிலும் ஏழ்மையான ஏழைகளுக்கு உதவ விரும்பி, புனித வாழ்க்கை வாழ்ந்த இத்தாலிய சலேசிய குருவானவரான மறைந்த மரியாதைக்குரிய அருட்தந்தை ஆர்ஃபியஸ் மந்தொவானி அடிகளார் அவர்களால்,1964-65-ல் சிறிய மரக்கன்றாக நடப்பட்ட இந்த மையம் இன்று ஒரு வலிமையான ஆலமரமாக வளர்ந்து, இப்போது தொன்போஸ்கோ பேறுபெற்றோர் சமூக நல மையம் என்று அழைக்கப்படுகிறது. ஏழை குழந்தைகள், இளம் பிள்ளைகள், வேலையில்லாத இளையோர்கள், கைவிடப்பட்ட முதியோர்கள், ஏழ்மையான பொருளாதார பின்னணியைச் சேர்ந்த பெண்கள், மற்றும் ஏழை குடிசைவாசிகள் என பலருக்கும், இந்த மையம் ஆண்டவனின் ஆலயம், ஒன்றிணைக்கும் திருச்சபை, உடல் மன நலனுக்கான விளையாட்டு மற்றும் மகிழ்ச்சிக் களம், அறிவையும் பண்பையும் கற்றுத்தரும் ஆசான், படிப்பு தரும் பள்ளி, பசிக்கு சோறிடும் இல்லம், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பின் வீடு,  ஆம், இதுதான்  தொன் போஸ்கோவின் கனவு.

மந்தொவானி அடிகளாருக்குப்பின், மறைந்த மதிப்பிற்குரிய அருட்தந்தை ஃபிரான்ஸிஸ் சுலுஸ் அடிகளார் அவர்கள், தனித்து மகிழ்ந்திருக்க யாருக்கும் உரிமை இல்லைஎன்றக் குறிக்கோளுடன், 13 ஆண்டுகள் இந்த மையத்தின் இயக்குநராக அயராமல் அரும்பணியாற்றினார். அன்பும் அறமும், கருணையும் உதவுதலும், இந்த தொன்போஸ்கோ பேறுபெற்றோர் சமூக நல மையத்தின், அடிநாதமாக இருந்து, இந்த நிறுவனத்தை இறைசாட்சியாக நிலைநிறுத்தியுள்ளது.